"ரெண்டு நாளில் அவனை போடுறேன்".. சொன்னதைச் செய்த ரௌடி..!
Published : May 25, 2022 6:32 PM
சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் தேடி வரும் நிலையில், அவரை கொலை செய்யப்போவதாக முன்கூட்டியே மிரட்டிவிட்டுச் சென்ற ரௌடி, சொன்னபடியே செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை முக்காணி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாஜக பிரமுகரான பாலச்சந்தர், செவ்வாய்கிழமை இரவு 3 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மத்திய சென்னை தலைவராக இருந்த பாலச்சந்தருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. கொலை நடந்தபோது அந்த பாதுகாவலர் பாலகிருஷ்ணன் அவருடன் இல்லை எனக் கூறப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொலையாளிகள் வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
4 தனிப்படைகளை அமைத்த போலீசார், கொலையாளிகள் யார் என்பதை விசாரணையில் கண்டுபிடித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த தர்கா மோகன் என்பவரின் மகன்களான பிரதீப் சஞ்சய் மற்றும் அவர்களது கூட்டாளி கலைவாணன் ஆகியோர் இந்த கொலையை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. வியாபாரிகளை மிரட்டி மாமூல் வாங்குதல், கொலை மிரட்டல், வழிப்பறி, கொள்ளை என பிரதீப் மீது 10 வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. அவருடைய சகோதரர் சஞ்சய் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பாலச்சந்தரின் பெரியம்மா மகன்களான ரூபன், தீபன் ஆகியோர் சிந்தாரிப்பேட்டை ஐயா முதலி தெருவில், ட்ரெஸ் பாயின்ட் என்ற ஒரு துணி கடையை நடத்தி வந்துள்ளனர். அந்தப்பகுதி வியாபாரிகளை மிரட்டி மாமூல் வாங்குவதை வழக்கமாகக் கொண்ட ரவுடி பிரதீப், இவர்களது துணிக்கடையிலும் மிரட்டி மாமூல் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரவுடி பிரதீப்பின் தொல்லை தாங்க முடியாமல் தனது சகோதரர் பாலச்சந்தரிடம் இதுகுறித்து முறையிட்டு, அவர் மூலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சில மாதங்களுக்கு முன்பு கைதான ரவுடி பிரதீப் ஜாமீனில் வெளியில் வந்து, கடந்த 22ஆம் தேதி ரூபன், தீபன் நடத்தி வரும் துணிக்கடைக்குச் சென்றுள்ளான். "என்னையே போலீஸ்ல மாட்டிவிடுறானா உங்க அண்ணன் ? இன்னும் இரண்டு நாளில் அவனை எங்கே பார்த்தாலும் வெட்டுவேன்" என பிரதீப் மிரட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, போலீசார் பிரதீப்பை தேடி வந்த நிலையில்தான் பாலச்சந்தர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல் புகாரின் பேரில் பிரதீப்பை உடனடியாக கைது செய்து இருந்தால் இந்த கொலை சம்பவம் நடந்து இருக்காது என பாலச்சந்திரனின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாஜக நிர்வாகி பாலச்சந்தரை கொலை செய்ய ஏற்கனவே பலமுறை முயன்று இருப்பதும் அது குறித்து உளவுத்துறையினர் எச்சரித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு பாலச்சந்தரின் பாதுகாவலராக அப்போது இருந்த காவலர் வீரபத்திரன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டிய பிரதீப் "நீ உடன் இருப்பதால்தான் பாலச்சந்தரை கொலை செய்ய முடியவில்லை, நீ போய்விடு இல்லை என்றால் உன்னையும் தீர்த்து கட்டிவிடுவேன்" என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அதே வேளையில் கொலையான பாலச்சந்தர் மீதும் 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 6 வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சரித்திர பதிவிட்டு குற்றவாளிப் பட்டியலில் பாலச்சந்தர் இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே கொலை சம்பவத்தின் போது பாதுகாவலர் பாலகிருஷ்ணன் உடன் இல்லாததால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தன்று பாலச்சந்தர் தனது பாதுகாவலரை வீட்டிலேயே இருக்க கூறிவிட்டு மார்க்கெட் வரை சென்று வருவதாக இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பாலச்சந்தர் தனியாகச் சென்றதும் தெரியவந்துள்ளது.